காதலர்களின் பதிவு திருமணங்கள்- புதிய நடைமுறை அமல்

குமரி மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடிகள் கேரளாவுக்கு சென்று பதிவு திருமணம் செய்ய முடியாத வகையில் அங்குள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் திருமணப் பதிவு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தால் அவர்களில் பெரும்பாலானோர் போய் நிற்கின்ற இடம் கேரள மாநிலம் பாறசாலையில் உள்ள பத்திர பதிவு
அலுவலகம்தான்.

இங்கு 18 வயது பூர்த்தியான ஆண், பெண் தாங்கள் ஓன்று சேர்ந்து வாழ்க்கிறோம் என தெரிவித்து பத்திரத்தில் பதிவு செய்து பின்னர் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைவது வழக்கம்.

இந்த திருமணத்துக்கு எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இதையும் ஏற்றுக் கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது.

இதுபோன்ற திருமணங்களுக்கு முன்னரே நோட்டீஸ் அளிக்க வேண்டியதில்லை. 20 ரூபாய் முத்திரை தாளும், 2 சாட்சிகளும் போதும், வயதை நிரூபிக்க கூட சான்று தேவையில்லை. பதிவாளர் பார்வையில் வயது 18 கடந்தவர்கள் என்று தெரிந்தால் போதும்.

இதில் பருவ வயதை எட்டாத சிறுமிகளையும் ஏமாற்றி திருமணம் செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்தன. இதற்காக பாறசாலை பகுதியில் ஏஜென்டுகளும் உண்டு. அவர்கள் தாங்களே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்.

சட்டபூர்வமற்ற திருமணம் என்ற அறியாமலேயே பெண்கள் இதற்கு சம்மதிக்கின்றனர். மேலும் இவ்வாறு நடக்கின்ற திருமணங்களுக்கு சட்டபூர்வமாக பின்னர் விவாகரத்து பெற முடியாது. மேலும் இவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு சட்டபூர்வமான உரி்மைகளுக்கும் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுவர்.

ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இதுபோன்ற நடந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலங்களில் நடைபெறுகின்ற சட்டத்திற்கு புறம்பான திருமணங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலங்களில் முத்திரை தாளில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறோம் என்று எழுதி பதிவு செய்கின்ற நடைமுறை அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

0 comments: