கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் திருநங்கைகள்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர திருநங்கைகள் 350 பேர்களுக்கு அரசு சார்பில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு ஏராளமான ஏழைகள் நடுத்தர மக்கள் பயன்அடைந்து வருகிறார்கள். அதன்படி திருநங்கைகளை கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்காக அவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் வெ.ஷோபனா கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில்,
முதல் அமைச்சர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 89 பேர் சேர்ந்துள்ளனர்.
அதில் நலவாரிய உறுப்பினர்களான மீனவர் நல சங்க உறுப்பினர்கள் 25 ஆயிரத்து 118 பேர்களும், ஊனமுற்றோர் நல சங்க உறுப்பினர்கள் 827 பேர்களும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்க உறுப்பினர்கள் 136 பேர்களும் இதர நல சங்க உறுப்பினர்கள் 27 ஆயிரத்து 669 பேர்களும் அடங்குவார்கள்.

மேலும் 500 திருநங்கைகள் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு திருநங்கைகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 228 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 500 பேர்களில் 350 திருநங்கைகள் கலைஞர் காப்பீட்டு திட்ட சிறப்பு காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என்றார்.

திருநங்கைகள் கூறுகையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எங்களை சேர்த்ததற்கு முதல்வர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இனிமேல் எங்களுக்கும் அவசர காலத்தில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று நினைக்கிறபோது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

0 comments: