திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் புகை கிளம்பியதால் சென்னையில் உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 182 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 182 பயணிகளும் 7 ஊழியர்களும் இருந்தனர்.நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது வால் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதை பார்த்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கும்படி பைலட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே புகை கசியும் நிலையில் விமானம் வருவதாக சென்னை விமான நிலையத்துக்கு திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதனால் உஷாரான சென்னை விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு வண்டி, மருத்துவக்குழு, முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்தனர்.இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
உடனடியாக விமானத்தில் இருந்த 182 பயணிகளும் அவசரம், அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புகை கசிவில் தீ பிடிக்காத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக 182 பயணிகளும் உயிர் தப்பினர்.விமான நிலைய பொறியாளர்கள் விமானத்தில் வால் பகுதியில் தீவிர சோதனை நடத்தியபோது எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இயக்க இயலாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து 182 பயணிகளும் வேறு ஒரு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment