நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளிக்கு இணையாக ஊக்குவிக்க பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இப்பள்ளியில் முதல் முறையாக, புதிதாக பள்ளிக்கு வரும் ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, சீனியர் மாணவர்கள் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளியின் சாலையை ஒட்டிய சுற்றுச் சுவர் பகுதிகளில் வண்ணம் பூசி, அதில் திருக்குறள் மற்றும் பொன்மொழிகள் எழுதி வைத்துள்ளனர்.
அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக மாறி வரும் நிலையில், இரவு நேரத்தில் சில சமூக விரோத கும்பல் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து, மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆங்காங்கே போட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்தில் நுழைந்த சமூகவிரோத கும்பல், மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை அங்குள்ள ஒரு வகுப்பறையின் ஜன்னலில் வைத்து விட்டு சென்றுள்ளது.இத்தகைய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேர கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரனிடம் கேட்ட போது, "பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில், இரவில் பள்ளி வளாகத்தில் நுழைந்து இது போன்ற இழி செயல்களில் ஈடுபடும் சமூகவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
1 comments:
Yanna Kodumai Sir Ithu
Post a Comment