தொடரும் கன மழை

தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.

இதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளிலும், உள் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை கடலூர் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சம்பா பயிர் இளம் பயிர்களாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்தால் சம்பா சாகுபடி பெரிய அளவு பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புறநகர்ப் பகுதிகள் பலவும் சேறுமயமாகியுள்ளது. பல பகுதிகளில் இப்போதே தண்ணீர் தேங்கித் தீவுகளாகத் தொடங்கியுள்ளன.

ஆலந்தூர், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பெருங்குடி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை விட்டு விட்டு கன மழை பெய்ததால் மக்கள் பெரும அவதிக்குள்ளாகினர்.

பல பகுதிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பலத்த மழை பெய்தது. அங்கு கட்டுமான பணிகளால் ஓடுபாதையில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதனால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

ராமநாதபுரம், பாம்பன், மண்டபம், ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. நேற்று காலையும் தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேசுவரத்தில் 81 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் பருத்தி, மிளகாய், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 comments: