பெஷாவரில் குண்டு வெடிப்பு மேயர் உட்பட 11 பேர் பலி

பாகிஸ்தானில் பெஷாவர் அருகே தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், மேயர் உட்பட 11 பேர் பலியாயினர்.பாகிஸ்தான் ராணுவம், தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, தலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், பெஷாவர் நகரின் புறநகர் பகுதியில் மட்டானி என்ற இடத்தில் உள்ள கால்நடை சந்தையில், தற்கொலைப் படையினர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த தில் மேயர் அப்துல் மாலிக் மற்றும் இளம் பெண் ஒருவர் உட்பட, 11 பேர் பலியாயினர்; 36 பேர் படுகாயமடைந் தனர். இதில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தலிபான்களின் நண்பராக இருந்த மேயர் அப்துல் மாலிக், தற்போது தலிபான் எதிர்ப்பாளராக உள்ளார். தலிபான்களுக்கு எதிராக பழங்குடி மக்களை கொண்ட எதிர்ப்புப் படையை இவர் உருவாக்கியுள்ளார். எனவே, இவரை ஒழித்துக்கட்ட தலிபான்கள் ஐந்து முறை முயன்றனர். பக்ரீத்துக் காக மட்டானி கால்நடை சந்தைக்கு வந்த மாலிக், காரில் இருந்து இறங்கியதும், தற்கொலைப் படையினர் குண்டை வெடிக்க செய்தனர்.


இச்சம்பவத்தில் எட்டு கார்கள் மற்றும் சில கடைகள் சேதமடைந்தன. தடயங்களை சேகரிப்பதற்காக போலீசார் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்துள்ளனர். மாலிக்கின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அவர் போலீஸ் உதவியில்லாமல் தனியாக வந்திருந்தார்.

0 comments: