குமரிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை திசை மாறி அரபிக் கடலுக்குப் போய் விட்ட போதிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. புதுச்சேரியும் மழைக்குத் தப்பவில்லை.
கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் உட்பகுதிகளிலும், புதுவையிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. குமரிக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே இதற்குக் காரணம். மேலும், மன்னார் வளைகுடாப் பகுதியில் இது நிலை கொண்டிருந்ததால், பலத்த மழை கிடைத்தது.
ஆனால் நேற்று திடீரென இந்த புயல் சின்னம், வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சிப் பகுதி மாவட்டங்களான கோவை, நெல்லை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கன மழை பெய்கிறது.
புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வராமல் நகர்ந்து போய் விட்டதால் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று முதல் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் வேகமும், அளவும் குறைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலில் கிழக்கிலிருந்து மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றார்.
மழைக்கு இதுவரை 22 பேர் பலி..
மழைக்கு இதுவரை தமிழகத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி , விழுப்புரத்தில் தலா ஆறு பேரும், கோவை, தூத்துக்குடி ராமநாதபுரத்தில் தலா இருவரும், மதுரை, திருச்சி, பெரம்பலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 22 பேர் பலியாகியுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை...
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு...
கோவை பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் சற்றே ஓய்ந்த மழை...
சென்னை நகரில் கடந்த நான்கு நாட்களாக விளாசித் தள்ளிய கனமழை நேற்று சற்று ஓய்ந்தது. நேற்று காலை முதல் லேசான மழை, அவ்வப்போது மட்டும் பெய்து வருகிறது.
இருப்பினும் நான்கு நாட்கள் பெய்த மழையால் தேங்கிய மழை நீர் வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை. இதனால் பல பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பவில்லை. மழை மட்டும்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளது.
வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment