ஒரு நாள் தொடரை வென்றது ஆஸி

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. குவஹாத்தியில் இன்று நடந்த 6வது போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியுற்றது.

5வது போட்டியில் சச்சின் என்ற புயல் மூலம் கெளரவமான முறையில் போராடித் தோற்ற இந்தியா, இன்று முன்கள பேட்ஸ்மேன்கள் சுத்தமாக கை விட்டதால் பரிதாபமான முறையில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்ச் என்று தெரிந்தும் துணிச்சலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் டோணி.

ஆனால் அதுவே இந்தியாவுக்கு வினையானது. முதல் ஓவரிலேயே ஷேவாக் (6), கம்பீரை (0) பறி கொடுத்து பரிதவித்த இந்தியா தொடர்ந்து சச்சின் (10), யுவராஜ் சிங் (6), சுரேஷ் ரெய்னா (0) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது.

அந்தத் தடுமாற்றத்திலிருந்து இந்தியாவை எழ வைக்க ரவீந்திர ஜடேஜாவும், பிரவீன் குமாரும் போராடினர். ஆனாலும் 170 ரன்களில் சுருண்டு போனது இந்தியா.

ஜடேஜா மிக மிக நிதானமாக ஆடினார். அவரது ஆட்டத்தைப் பார்த்தபோது டெஸ்ட் போட்டியா இது என்ற சந்தேகம் வந்து விட்டது. அப்படி ஒரு நிதானமான ஆட்டம். ஆனால் அவ்வளவு பொறுமையாக அவர் ஆடியதால்தான் ஏதோ கெளரவமான ஸ்கோரையாவது இந்தியா எட்ட முடிந்தது.

ஆமை வேகத்தில் ஆடிய ஜடேஜா 103 பந்துகளைச் சந்தித்து 53 ரன்களை எடுத்தார். கேப்டன் டோணி தன் பங்குக்கு 77 பந்துகளைச் சாப்பிட்டு 24 ரன்களுடன் வெளியேறினார்.

பிரவீன் குமார் சற்று பரவாயில்லை. 51 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

இப்படியாக தடுமாறி ரன் சேர்த்த இந்தியா 48 ஓவர்களில் 170 ரன்களில் வீழ்ந்தது.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் போலிங்கர் இந்தியாவை எழுந்திருக்கவே விடாமல் விளாசித் தள்ளி 5 விக்கெட்களை சாய்த்தார். மிச்சல் ஜான்சன் 3 விக்கெட்களை அள்ளினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 41.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 172 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

அதிகபட்சமாக வாட்சன் 49 ரன்கள் எடுத்தார். பான்டிங், காமரூன் ஒயிட் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

ஆட்ட நாயகனாக போலிங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments: