சேவை செய்ய நடை பயணம்

"ஏழை எளியவர்களுக்கு சேவை செய்யவும், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு தங்கும் வசதி ஏற்படுத்தவும் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன்' என, ஐரோப்பிய வாலிபர் காஸ்பர் ஓரிகேக் தெரிவித்தார்.
ஐரோப்பாவைச் சேர்ந்தவர் காஸ்பர் ஓரிகேக்; "உலகம் எனது நாடு' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்காக நிதி வசூலிப்பதற்காக, நடை பயணமாக திருத்தணிக்கு நேற்று வந்தார். அவர் கூறியதாவது: நான் ஸ்சுலோவேனியா நாட்டைச் சேர்ந்தவன். 1984ம் ஆண்டு என்னுடைய உலக நடை பயணத்தை துவங்கினேன். 24வது வயதில் இந்த நடை பயணத்தை துவங்கினேன். அன்பு, அமைதி, சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 45 நாடுகளை நடை பயணமாகக் கடந்து, 1992ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன்.
அன்பு, அமைதி சகோதரத்துவம் பற்றி விளக்கி கூறி வருகிறேன். மேலும், இந்த அனுபவத்தில் இந்தியா ஒரு சிறிய உலகம் என்பதை உணர்ந்தேன். இந்தியாவின் கலாசாரம், இயற்கை வளங்கள், எழில்மிகு இயற்கை காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஏழை, எளிய மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில், தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தினேன். ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிரதீப்பாடு என்ற இடத்திலும் இத்தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தில், தெருவில் திரியும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடமளிக்கப்படும். கல்வி கற்பிப்பது, எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவ மையங்கள், முதியோர் இல்லம், இளைஞர்களுக்கான பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையங்கள் நிறுவுதல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்வேன். இவ்வாறு ஓரிகேக் கூறினார். திருத்தணியில் முகாமிட்டுள்ள இவர், சில தினங்களில் திருப்பதி நோக்கி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

0 comments: