மீனவர்கள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் ஒரு விசை படகு மட்டும் கரை திரும்பாமல் இருந்தது. அதில் இருந்த செபாஸ்டின்(45), பாக்கியராஜ்(36), அன்பரசு(60) ஆகியோர் கதி என்ன என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களது உறவினர்கள் மூன்று விசைப்படகுகளில் மாயமான மீனவர்களை தேடி சென்றனர்.

அப்போது ஆழ்கடல் பகுதியில் விசை படகு பழுதானதால் அந்த மீனவர்கள் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் மாற்று படகு மூலம் கரைக்கு திரும்பினர். இந்த நிலையில் கோட்டைபட்டினத்தை சேர்ந்த சீமாசாமி(42), ராவுத்தர்(45), நாகசாமி(50), ஆகிய 3 மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நேற்று காலை கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இன்று காலை வரை அந்த மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டது. மீனவர்கள் மாயம் பற்றி கடற்படை டி.எஸ்.பி. அம்சவள்ளியிடம் புகார் செய்யப்பட்டது. மேலும் இன்று காலை மற்ற மீனவர்கள் படகுகளில் மாயமான மீனவர்களை தேடி சென்றனர். அப்போது சீமாசாமி, ராவுத்தர், நாகசாமி ஆகிய 3 மீனவர்களும் படகில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது “திடீர்” என்று பலத்த காற்று வீசியதால் அவர்கள் படகு கடலில் திசைமாறி சென்றது.

இதனால் அந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். உதவிக்கு சென்ற மீனவர்கள் அவர்களை மீட்டனர்.

0 comments: