ஹெட்லியுடன் தொடர்பா? நடிகைகள் மறுப்பு

சிம்லா: அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள லஸ்கர்-ஈ-தோய்பா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் பாலிவுட் நடிகைகள் கங்கனா ரணாவத், ஆர்த்தி சாப்ரியா ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக வெளியான தகவலை அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர்.

இவர்களில் நடிகை கங்கனா ரணாவத், `தாம் தூம்' என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார்.பாலிவுட் படத்தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட் மூலமாக இந்த நடிகைகள் இருவரும் ஹெட்லிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.


இதையடுத்து, அந்த நடிகைகள் தங்களுக்கு எதிரான செய்திகளை மறுத்துள்ளனர்.கங்கனா தனது இணைய தள பிளாக்கில், இதுபோன்ற பொறுப்பற்ற ஊடகத் தகவல்களால் தாம் மிகுந்த வருத்தமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.தேவையில்லாமல் தனது பெயரை ஹெட்லி விவகாரத்தில் இழுத்திருப்பதாகவும், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கவைத்திருப்பதாகவும் கங்கனா குறிப்பிட்டுள்ளார். அதுபோன்ற தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், இதனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த கவலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.


மற்றொரு நடிகையான ஆர்த்தி சாப்ரியா, தனக்கு எதிரான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மும்பை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தனக்கு எதிராக மலிவான, பொய்யான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு தாம் சென்ற போதிலும், ராகுல் பட்டையோ அல்லது ஹெட்லியையோ தமக்குத் தெரியாது என்று வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்துள்ள புகாரில் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

0 comments: