லிபியாவில் விமானம் வெடித்து சிதறி 103 பேர் பலி! எட்டு வயது சிறுவன் மட்டும் தப்பினான்

தென் ஆப்ரிக்காவிலிருந்து லிபியா நாட்டுக்கு சென்ற விமானம் தரையிறங்கும் போது வெடித்து சிதறியதில் 103 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.


தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-330 ரக விமானம், 93 பயணிகள் மற்றும் 11 ஊழியர்களுடன் லிபியாவின் டிரிபோலி நகருக்குச் சென்றது. டிரிபோலியில் இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதை அருகே வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 61 பேர் பலியாயினர். இதுதவிர ஆப்ரிக்கா, லிபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 42 பேர் இறந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான் என, டிரிபோலி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பாக லிபியா போக்குவரத்து அமைச்சர் முகமது அலி ஜிடன் கூறுகையில், ''விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விபத்துக்கு பயங்கரவாதிகள் யாரும் காரணமல்ல. ''விபத்தில் உயிர் தப்பிய சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இருந்தாலும், அவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை,'' என்றார்.


லிபியாவை சேர்ந்த அபிரிகுயா ஏர்லைன்ஸ் நிறுவனம் பாரிசில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் கடந்த 2007ம் ஆண்டு ஐந்து விமானங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது. அதில் ஒன்று தான் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வரை 96 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தின் கருப்பு பெட்டி தேடப்பட்டு வருகிறது. கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும். விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

0 comments: