சாலையோரம் நிழல் தரும் மரங்கள் வளர்க்க உத்தரவு: பூமி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை

பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நடவடிக்கையாக நெடுஞ்சாலைகளின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை வளர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 100 மரங்களை நடவு செய்து, நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.


ஆங்கிலேயர் காலத்தில் சாலையோரங்களில் பலன் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டன. மரங்கள் சூழ்ந்துள்ள சாலையில் செல்லும் போது வெப்பம் தெரியாது. நூறாண்டு பழமையான மரங்கள் தூர்ந்து போனதால் வெட்டப்பட்டன. நான்கு வழிச்சாலை உருவாக்கத்தின் போதும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய மரங்களை சாலையோரங்களில் வளர்க்கவில்லை. இதனால், சாலையில் செல்லும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகளவு உள்ளது. முன்மாதிரி கிராமம்: மதுரை மாவட்டம் சோளங்குருணி கிராமத்தில் ஆங்கிலேயர் காலத்தில் வளர்க்கப்பட்ட புளிய மரங்கள் பட்டுப்போயின. அவற்றிற்கு பதிலாக பலன் தரும் புளிய மரங்களை கிராம மக்கள் வளர்த்தனர். முறைவைத்து மரங் களை பராமரித்து வருகின்றனர். இதில் இருந்து ஆண்டு தோறும் கிடைக்கும் புளியை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை, கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிடுகின்றனர். சாலையோரம் வளர்க்கப்படும் மரங்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. எனினும், சோளங்குருணி கிராம மக்களின் ஒற்றுமை, உழைப்பை கருத்தில் கொண்டு மரங்களை பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடமே நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.


மரம் வளர்க்க உத்தரவு:மரம் வளர்ப்பில் முன்மாதிரியாக திகழும் சோளங்குருணி கிராமத்தைப் போல், சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வளர்க்க நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை - நத்தம் சாலையின் இருபுறமும் 100 எண்ணிக்கையில் புங்கன், புளியன், வேப்ப மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை கால்நடைகள் மேய்ந்து விடாமல் இருக்க, முள்வேலி அமைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படுகிறது. 100 மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடைந்ததும் அடுத்ததாக 100 மரக் கன்றுகள் நடப்படும். மரக்கன்றுக்கு சேதம் விளைப்போர் அல்லது கால்நடைகளை மேயவிடுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள் ளது. பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இம்முயற்சியும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதும் பாராட்டுக்குரியது.

0 comments: