பாக்., - நியூசி., இன்று பலப்பரீட்சை

இன்றைய "சூப்பர்-8' போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் "சூப்பர்-8' போட்டியில் தோல்வியடைந்ததால், இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


வெஸ்ட் இண்டீசில், மூன்றாவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் "இ' பிரிவு "சூப்பர்-8' போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.


பாக்., ஆதிக்கம்: சர்வதேச "டுவென்டி-20' கிரிக்கெட் அரங்கில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி, நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


பீல்டிங் கவலை: நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி, இதுவரை சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. நேற்று முன்தினம் நடந்த "சூப்பர்-8' போட்டியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு இந்த அணியின் மோசமான பீல்டிங் முக்கிய காரணம். சுலப கேட்ச், ரன்-அவுட் வாய்ப்புகளை பாகிஸ்தான் அணியினர் வீணடித்தனர்.


இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி, சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்துகிறது. சல்மான் பட், கம்ரான் அக்மல் பொறுப்பாக ஆடுவது, ஆறுதல் அளிக்கிறது. சுழலில் அஜ்மல் நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணியினர், முழுதிறமையை வெளிப்படுத்தினால் சுலப வெற்றி பெறலாம்.


சாதிப்பாரா மெக்கலம்: நேற்று முன்தினம் நடந்த "சூப்பர்-8' போட்டியில் நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேற, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்த போதிலும், அதிரடி துவக்க வீரர் பிரண்டன் மெக்கலம் சோபிக்காதது ஏமாற்றம். இன்றைய போட்டியில் பிரண்டன் மெக்கலம், ஜெசி ரைடர், ரோஸ் டெய்லர் உள்ளிட்டோர் அதிரடி காட்டினால் நல்லது. சுழலில் வெட்டோரி, சாதிக்க வேண்டும்.
இரு அணியினரும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குவதால், சுவாரஸ்யமான போட்டியை காண வாய்ப்பு உள்ளது.

0 comments: