சொத்து மதிப்பு ரூ.5,000க்குள் இருந்தால் சலுகை

சொத்துகள் வாங்கும் போது 5,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கு, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளித்து அரசு அறிவித்துள்ளது.சுற்றுலா மற்றும் பதிவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்துக்கு அமைச்சர் சுரேஷ் ராஜன் அளித்த பதில்:பதிவுத் துறையை நிர்வகிக்கும் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு போதிய இடவசதி இல்லாததால், நவீன வசதிகளுடன் கூடிய அடுக்கு மாடி வளாகம், முன்னர் பதிவுத் துறைத் தலைவர் அலுவலகம் இருந்த சென்னை பொது அஞ்சல் அலுவலகம் அருகில், கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிர்புறம், 20 ஆயிரத்து 765 சதுர அடி பரப்பில் கட்டப்படும்.


ஏழைகள் சொந்தமாக சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, 3,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் போது, அந்த ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, 1998ல் அரசு உத்தரவிட்டது. தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், 5,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.ஆவணங்களில் சொத்து மாற்றம் செய்யும் போது கட்டணமும் மாற்றப்பட்டால், அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் கட்ட வேண்டும். கட்டடங்களை மதிப்பிட, பதிவு அலுவலர்கள் களப்பணி மேற்கொள்வர். தற்போது, 50 ஆயிரம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள கட்டடங்களுக்கு களப்பணி செய்யாமலேயே, ஆவணம் திருப்பி வழங்கப்படுகிறது.


தற்போது கட்டடங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், கிராமப்புறங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும், நகர்ப்புறங்களில் இரண்டு லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும் களப்பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக் கப்படும். மாநிலம் முழுவதும் நடக்கும் கிறிஸ்தவர்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு, சென்னையில் உள்ள பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மட்டுமே சான்று வழங்கப்படுவதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இனி, கிறிஸ்தவர்களுக்கு இடையேயான திருமணங்களுக்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பவும், அலுவலகத்திலேயே சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.

0 comments: