பேராவூரணியில் இடிந்த ஆற்றுப்பால கரையை சீரமைக்க கோரிக்கை

பேராவூரணி நகரின் மையப்பகுதியில் உள்ள இடிந்து விழுந்த ஆற்றுப்பாலத்தின் கரையை உடன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் நகரின் மையப்பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மூலம் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், மாவடுகுறிச்சி, பொன்னாங் கன்னிக்காடு, பழையநகரம் உட்பட பல கிராமங்கள் வழியாக சென்று 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலங்களின் சாகுபடிக்காக பயன்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழையால் பட்டுக் கோட்டை-பேராவூரணி சாலையில் வெள்ளம் புகுந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. வெள்ளப்பெருக்கின் போது ஒருபக்க பாலச் சுவர் இடிந்து விழுந்தது. பொதுப்பணித்துறையினர் இடிந்த பகுதியின் ஓரத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்படுத்தியதோடு சரி. இந்த சாலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கோட் டைப்பட்டினம், கறம்பக்குடி, அதிராம் பட்டினம் வழித்தடங்களில் கனரக வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. மேலும் தேவதாஸ் சாலை, ஜவகர் சாலை சந்திப்பு சாலையாகவும், பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகவும் இப்பகுதி உள்ளது.


இந்நிலையில் பாலம் இடிந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் கரைந்து போனதால் வாகனங்கள் பாலத்திற்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேட்டபோது நெடுஞ் சாலைத்துறையினர் தான் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களோ பேராவூரணி பேரூராட்சியில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருவழிச் சாலையாக அமைப்பதற்கான திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. வந்ததும் உடனடியாக பாலப்பணி முடிக்கப்பட்டு விடும் என்கின்றனர். எனவே விபத்தை தடுக்கும் வகையில் உடன் பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 comments: