இந்திய அணியின் உலககோப்பை கனவுக்கு அடி! *வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி

"டுவென்டி-20' உலக கோப்பை "சூப்பர்-8' போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம், இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்ததால், கோப்பை கனவு தகர்ந்தது. 98 ரன்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், தனது அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் "சூப்பர்-8' சுற்று, "எப்' பிரிவு போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை சந்தித்தது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக போட்டி அரைமணி நேரம் தாமதமாக துவங்கியது. "டாஸ்' வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, மீண்டும் "பீல்டிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.

சிறந்த துவக்கம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல், சந்தர்பால் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். சந்தர்பால் "அடக்கி' வாசித்தார். மறுபக்கம் புயல் வேகத்தில் ஆடிய கெய்ல், இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். யூசுப் பதானின் பந்தில், இத்தொடரின் இமாலய சிக்சரை (112 மீ.,) பதிவு செய்தார். சந்தர்பால் 23 ரன்கள் எடுத்தார்.

ஜடேஜா ஏமாற்றம்:
பின் கெய்லுடன் டேரன் சமி ஜோடி சேர்ந்தார். ரவிந்திர ஜடேஜாவுக்கு, வேறுவழியின்றி வாய்ப்பு கொடுத்தார் தோனி. இந்த ஓவரில் கெய்ல், சமி தலா ஒரு சிக்சர் அடித்து மிரட்டினர். தனது இரண்டாவது ஓவரில் ஒருவழியாக சமியை (19), ஜடேஜா அவுட்டாக்கினார்.

நழுவிய சதம்:
46 ரன்கள் எடுத்த நிலையில் நெஹ்ரா பந்தில் தப்பிய கெய்ல், பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். தொடர்ந்து இவர் சிக்சர்களாக விளாச, ஸ்கோர் மின்னல் வேகத்தில் <உயர்ந்தது. போலார்டு, 17 ரன்கள் எடுத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்ல், 98 ரன்னில் (7 சிக்சர், 5 பவுண்டரி) ரன் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

விக்கெட் சரிவு:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் "வேகங்களிடம்' சரண் அடைந்தனர். தேவையற்ற "ஷாட்' அடித்து விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர். துவக்கத்தில் முரளி விஜய் (7) ஏமாற்றினார். காம்பிர் (14) மறுபடியும் "ஷார்ட் பிட்ச்' பந்தில் வெளியேறினார். ரோகித் சர்மா, 5 ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார்.

ரெய்னா ஆறுதல்:
மூன்று விக்கெட்டுக்கு 38 ரன்கள் என, தடுமாறிய இந்திய அணிக்கு, பிராவோ ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்து ரெய்னா, யுவராஜ் ஜோடி ஆறுதல் அளித்தது. போலார்டு ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய ரெய்னா (32), கெய்ல் சுழலில் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் யுவராஜ் (12), பென் சுழலில் சிக்கி, அதிர்ச்சி அளித்தார்.
இந்தியா தோல்வி:
பின் கேப்டன் தோனி, யூசுப் பதான் இணைந்து போராடினர். கெய்ல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்த யூசுப் பதான் (17) வெளியேற, அணியின் தோல்வி <உறுதியானது. சற்று நம்பிக்கை தந்த தோனி (29) ரன் அவுட்டானார். ஹர்பஜன் (14), ஜடோஜாவும் (5*), ஏமாற்ற இந்திய அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை கெய்ல், தட்டிச் சென்றார்.


ஜடேஜா தேவையா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய ரவிந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து வெறுப்பேற்றினர். இம்முறையும் படுமோசமாக செயல்பட்டார். சந்தர்பால் கொடுத்த சுலப "கேட்ச்சை' கோட்டைவிட்டார். அப்போது 12 ரன் எடுத்திருந்த சந்தர்பால், பின் 23 ரன்கள் எடுத்தார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஓவரில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்த ஜடேஜா, நேற்று 2 ஓவரில் 27 ரன்கள் (3 சிக்சர்) கொடுத்தார்.


பீல்டிங் சொதப்பல்
இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. நெஹ்ரா பந்தை தூக்கி அடித்தார் கெய்ல். இதனை பிடிக்க தோனி ஓடி வந்தார். மறுபக்கத்தில் இருந்து தேவையில்லாமல் பாய்ந்து வந்த யூசுப் பதான் தோனி மீது விழ, கேட்ச் வாய்ப்பு பறிபோனது. அப்போது 46 ரன் எடுத்திருந்த கெய்ல், பின் 98 ரன்கள் எடுத்து இந்திய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


சர்ச்சை கிளப்பிய ரோகித்
போலார்டு பந்தை ரோகித் சர்மா அடிக்க, அதனை பிடித்த வெஸ்ட் இண்டீஸ் கீப்பர் ராம்தின் "அவுட்' கேட்டார். அம்பயர் பில்லி பவுடன் (நியூசி.,) உடனே கையை உயர்த்த அதிர்ச்சி அடைந்தார் ரோகித். பந்து முழங்கையில் பட்டு சென்றதாக கூறிய இவர், மூன்றாவது நடுவரிடம் கேட்கும்படி வாதிட்டார். "ரீப்ளேயில்' ரோகித் சொன்னது தான் சரியாக இருந்தது. ஆனால் பவுடன், தனது தவறான தீர்ப்பை, நியாயம் செய்து ரோகித்தை வெளியேற்றினார். அம்பயர் தீர்ப்புக்கு எதிர்த்து வாதிடுவது குற்றம். இதற்காக ரோகித் சர்மாவுக்கு அபராதம் அல்லது தடை விதிக்கப்படலாம்.
* இதே ஓவரின் முதல் பந்தை போலார்டு சரியாக வீசினார். ஆனால் அம்பயர் பில்லி பவுடன் "வைடு' கொடுத்தார். இப்படி இவரது மோசமான தீர்ப்புகள் தொடர்ந்தது.


திருந்தாத தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில் "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி "பீல்டிங்' தேர்வு செய்து தோல்வியடைந்தார். நேற்றும் இதே தவறை செய்தார். தவிர, மீண்டும் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளித்த தவறு மேல் தவறு செய்தார்.


வாய்ப்பு கிடைக்குமா?
"சூப்பர்-8' சுற்றில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வென்றால், அரையிறுதிக்கு எளிதாக தகுதி பெறலாம். இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி அடைந்தால், வாய்ப்பை அனேகமாக இழந்து விட்டது. இனி இந்திய அணி, ஏதாவது அதிசயம் நடந்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம். முதலில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை வீழ்த்த வேண்டும். பின்னர் நாளை நடக்க உள்ள, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் படுமோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால், ரன்-ரேட் அடிப்படையில் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.



ஸ்கோர் போர்டு
வெஸ்ட் இண்டீஸ்

கெய்ல் ரன்-அவுட்(சப்-கார்த்திக்/தோனி) 98(66)
சந்தர்பால் (கே)தோனி (ப)நெஹ்ரா 23(29)
சமி (கே)விஜய் (ப)ஜடேஜா 19(10)
போலார்டு (கே)யூசுப் (ப)ஜாகிர் 17(11)
பிராவோ (கே)ரோகித் (ப)நெஹ்ரா 1(2)
சர்வான் (கே)ரோகித் (ப)நெஹ்ரா 0(1)
ஹிண்ட்ஸ் -அவுட் இல்லை- 0(0)
ராம்தின் -அவுட் இல்லை- 4(2)
உதிரிகள் 7
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,) 169
விக்கெட் வீழ்ச்சி: 1-80(சந்தர்பால்), 2-119(சமி), 3-160(போலார்டு), 4-163(பிராவோ), 5-164(சர்வான்), 6-165(கெய்ல்).
பந்துவீச்சு: ஹர்பஜன் 4-0-16-0, ஜாகிர் 4-0-36-1, நெஹ்ரா 4-0-35-3, யூசுப் 4-0-28-0, ரெய்னா 2-0-23-0, ஜடேஜா 2-0-27-1.
இந்தியா
விஜய் (கே)போலார்டு (ப)சமி 7(14)
காம்பிர் (கே)ராம்தின் (ப)ரோச் 15(14)
ரெய்னா (கே)சமி (ப)கெய்ல் 32(25)
ரோகித் (கே)ராம்தின் (ப)போலார்டு 5(8)
யுவராஜ் (கே)சந்தர்பால் (ப)பென் 12(14)
தோனி ரன்-அவுட்(பிராவோ) 29(18)
யூசுப் (கே)ஹிண்ட்ஸ் (ப)டெய்லர் 17(10)
ஹர்பஜன் (கே)பிராவோ (ப)ரோச் 14(10)
ஜடேஜா -அவுட் இல்லை- 5(6)
நெஹ்ரா (கே)பென் (ப)பிராவோ 0(2)
ஜாகிர் -அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 19
மொத்தம் (20 ஓவரில், 9 விக்.,) 155
விக்கெட் வீழ்ச்சி: 1-12(விஜய்), 2-27(காம்பிர்), 3-38(ரோகித்), 4-80(ரெய்னா), 5-81(யுவராஜ்), 6-114(யூசுப்), 7-139(தோனி), 8-150(ஹர்பஜன்), 9-152(நெஹ்ரா).
பந்துவீச்சு: சமி 3-0-16-1, டெய்லர் 4-0-24-1, ரோச் 4-0-38-2, பிராவோ 4-0-28-1, போலார்டு 2-0-23-1, கெய்ல் 2-0-22-1, பென் 1-0-2-1.

0 comments: