ரயில்வே 'கேன்டீன்' இட்லியில் வண்டு

கோவை ரயில்வே கேன்டீனில் வாங்கிய இட்லியில், வண்டு இருந்தது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார்.தஞ்சை நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர்; பந்தல் ஒப்பந்ததாரர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்கள் இருவரும், மே 6ம் தேதி காலை, கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜனசதாப்தி ரயிலில் பயணித்தனர்.கோவையில் உள்ள ரயில்வே கேன்டீனில் இட்லி, வடை வாங்கினர். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், அலுமினிய பேப்பர் டப்பா பார்சலை பிரித்து, இட்லி சாப்பிட்ட போது, அதில் பெரிய வண்டு இருந்தது. அதை கவனித்த கலைச்செல்வி, சாப்பிட மனமின்றி இட்லி பார்சலை அப்படியே வைத்துவிட்டார்.


கலைச்செல்வி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இட்லியில் வண்டை பார்த்ததால், மன உளைச்சல் அடைந்ததுடன், அவர் வாந்தி எடுத்தார்.இது குறித்து, அன்று மாலை 3 மணியளவில், தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் ராஜசேகர் புகார் செய்தார். இப்புகாரை, இந்திய ரயில்வே உணவு சேவைக் கழகம் சார்பில் உள்ள புகார் மனுவில் விரிவாக எழுதச் சொல்லி, ரயில்வே நிர்வாகம் பெற்றுக் கொண்டதுடன், அதற்கான ரசீது வழங்கினர். ரயில் பயணி ராஜசேகர் கூறுகையில், 'நாங்கள் கோவை ரயில்வே கேன்டீனில் வாங்கிய இட்லியில் பெரிய வண்டு இருந்தது. இதை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் எங்கள் நிலை என்ன ஆவது? ரயில்வே கேன்டீனில் வழங்கப்படும் உணவு தரமுடையதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 comments: