ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச மோட்டார் வாகனம்

கடும் உடல் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மோட்டர் வாகனம் இலவசமாக வழங்க வரும் 13ம் தேதி நேர்காணல் நடக்கிறது என்று கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொலைதூரம் பஸ்சில் பயணம் செய்து கல்வி கற்கும் கடும் ஊனமுற்ற மாணவ, மாணவிகள் கால்களால் தவழ்ந்து செல்லும் அவலம் மற்றும் இன்னல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அவர்களின் தகவமைப்பை உறுதி செய்து தடையில்லா சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு உதவி அளிக்கப்பட உள்ளது.


இதன்படி 2 கால்களும் செயல் இழந்து 2 கைகளும் நல்ல நிலையில் வண்டியை இயக்கக் கூடியவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்றாவது சக்கரம் பொருத்திய மோட்டார் வண்டி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக இலவசமாக வழங்கப்பட உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருக்கும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.30 ஆயிரத்திற்கு மிகாமல் கல்வி பயிலும் கடும் உடல் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வுக் குழுவினரால் வரும் 13ம் தேதி மதியம் 2 மணிக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.


இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல், வருமான சான்றிதழ், கல்வி பயிலும் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். இது தொடர்பாக மேலும் விபரம் அறிய விரும்புவோர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

0 comments: