அண்ணா சாலையில் இரண்டு மேம்பாலங்கள் தேவையா?: போக்குவரத்து நெரிசல் தீராது; பிரச்னை தான் அதிகரிக்கும்: திட்டத்தை கைவிட மக்கள் வலியுறுத்தல்

பிரசித்தி பெற்ற சென்னை அண்ணா சாலையில், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மேம்பாலங்களால் போக்குவரத்து பிரச்னை தீர வாய்ப்பில்லை; நெரிசல்தான் மேலும் அதிகரிக்கும் என்பதால், மேம்பாலத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சாலை மேம்பாட்டு வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து பிரச்னை பெரிதாக உருவெடுத்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், தேவைப்படி தனியார் இடங்களையும் கைப்பற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையின் முக்கிய இடங்களில் மேம்பாலங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. சென்னையின் மைய பகுதியான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 500 கோடி ரூபாய் செலவில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சென்னை புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பட்டுலாஸ் சாலை வரை இரண்டு கி.மீ., தூரத்திற்கு ஒரு மேம்பாலமும், அறிவாலயத்திலிருந்து சைதாப்பேட்டை வரை மூன்று கி.மீ., தூரத்திற்கு மற்றொரு மேம்பாலமும் அமைக் கப்பட உள்ளது. இதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை முடுக்கிவிட்டுள்ளது.


மேம்பாலத் திட்டங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா சாலையில் 500 கோடி ரூபாயில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக வரைபட தயாரிப்பு, திட்டமிடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன் ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் விடப்படும். நான்கு ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அண்ணாசாலையில் பூமிக்கடியில் மெட்ரோ ரயிலும், மேலே மேம்பாலமும் அமைகிறது. இரண்டு பணிகளும் ஒரே நேரத் தில் நடக்கும். மெட்ரோ ரயில் ஓடும்போது, அண்ணா சாலை மேம்பாலமும் போக்குவரத்துக்கு தயாராகி விடும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அண்ணா சாலையில், மெட்ரோ ரயில், இரண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளால் போக்குவரத்து நிறுத்தும்போது, எந்த வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்ற கேள்விக்கு, 'அது எங்களுக்குத் தெரியாது, பாலம் கட்டும் பணிதான் எங்களுடையது, போக்குவரத்தை மாற்றுவதும், சமாளிப்பதும் டிராபிக் போலீஸ்தான் பார்க்க வேண்டும்' என்று சமாளிக்கின்றனர். சென்னையின் பல இடங்களில் அமைக்கப்பட்டமேம்பாலங்கள் ஓரளவு பலனைத் தந்துள்ளது என்றாலும், பல இடங்களில் மேம்பாலங்களால் போக்குவரத்து பிரச்னை தீரவில்லை. சென்னை டி.டி.கே., சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றாலும், நெரிசல் பிரச்னை தீரவில்லை. பாலத்தின் கீழே உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளதால் வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.


சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி முடிவடைந்த வடசென்னை பெரம்பூர் மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலிருந்தே பிரச்னைதான். எந்த நோக்கத்திற்காக மேம்பாலங்கள் அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கத்திப்பாரா மேம்பாலம் அமைந்ததால் தாம்பரம், போரூரிலிருந்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் கத்திப்பாரா வரை வந்து விடுகின்றன. அதே நேரத்தில் பல பகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் வந்து சேருவதால் கிண்டி ரயில்வே மேம்பாலம் அருகே எதிர்பாராத அளவில் நெரிசல் அதிகரித்துவிட்டது. கிண்டி பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலையில் மேம்பாலம் அமைத்தாலும் இதே சிக்கல் அதிகமாகும் என்ற கருத்து எழுந்துள்ளது.


சிறப்பு மிக்க அண்ணா சாலை: மன்றோ சிலையில் துவங்கி, கத்திப்பாரா சந்திப்பு வரை 15 கி.மீ., தூரம் நீண்டு செல்கிறது. நீண்ட நெடிய, அதே நேரத்தில் வடிவமைப்பாலும் அழகு நிறைந்தது அண்ணா சாலை. சென்னை அண்ணா சாலை என்றால் நினைவில் நிற்கும் இடமாக உள்ளது, நவீன கட்டடக்கலை அமைப்பைக் கொண்ட கட்டடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க புராதன கட்டடங்கள் என பல கட்டடங்கள் அண்ணாசாலையில் அமைந்துள்ளன. சென்னையில் அமைந்த முதல் 14 அடுக்கு மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி., கட்டடம் இன்றும் இயல்பான அழகுடன் உள்ளது. பாரம்பரியமிக்க கட்டடங்கள் மட்டுமல்ல, பாரம்பரிய மிக்க சாலைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவை தான். போக்குவரத்து நெரிசல் என காரணம் காட்டி, அண்ணா சாலையில் மேம்பாலங்கள் அமைப் பதால் போக்குவரத்து பிரச்னை தீரும் என எதிர்பார்க்க முடியாது; மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும், இதனால், மேம்பாலத் திட்டத்தை அரசு கைவிட வேண்டுமென பரவலான கருத்து எழுந்துள்ளது.


மக்களின் கருத்துக்கள் இதோ: பி.பி.ராஜன் - வர்த்தக பிரமுகர்: புதிய தலைமைச் செயலகம் முதல் பட்டுல்லாஸ் சாலை வரை நெரிசல் என்பதே இல்லை. நெரிசல் இல்லாத இடத்தில் மேம்பாலம் என்ற அறிவிப்பு புதிராக உள்ளது. நெரிசல் உள்ள தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் தான் பாலம் தேவை. அண்ணாசாலையில் மேம்பாலம் தேவையில்லை.


ஆறுமுகம் - டிராபிக் போலீஸ்: புதிய மேம்பாலம் சரியாக திட்டமிடப்பட வேண்டும். புது தலைமைச் செயலகம், பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு வரை மேம்பாலத்தில் வரும் வாகனங்கள், டி.வி.எஸ்., ஆனந்த் தியேட்டர் சிக்னல்களில் சிக்கும். இதனால் இருபுறமும் நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை. வேண்டுமானால் அண்ணாசாலைக்கு மாற்றாக முழுநீள மேம்பாலம் அமைக்கலாம்.


உதயகுமார் - ஆட்டோ டிரைவர்: நெரிசல் உள்ள இடத்தில்தான் பாலம் தேவை. ஏற்கனவே பீட்டர்ஸ் சாலையில் இரண்டு மேம்பாலங்கள் அமைத் துள்ளனர். அது அவ்வளவாக பயனின்றி உள்ளது. அண்ணா சாலையில் அதுவும், தலைமைச் செயலகம்-பட்டுல்லாஸ் சாலை வரை மேம்பாலம் தேவையில்லை. அறிவாலயம்-சைதாபேட்டை மேம்பாலத்தை வரவேற்கலாம்.


பாலசந்திரன் - ஓய்வு பெற்ற ரயில்வே இன்ஜினியர்: அண்ணா சாலையில் இரண்டு மேம்பாலங்கள் அமைவது பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பதால் நாம் வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து சிக்கல் ஏற்படாத வகையில் திட்டமிட்டு, ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


ஆறுமுகம் - கார் டிரைவர்: தேனாம்பேட்டை பகுதியில் சற்று நெரிசல் உள்ளதால் மேம்பாலம் அமைக்கலாம். தலைமைச் செயலகம்-பட்டுல் லாஸ் சாலையில் மேம்பாலம் அமைப்பது தேவையில்லாதது. அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


காஞ்சனா - மின்வாரிய பொறியாளர்: பாலங்கள் அமைவது நல்லதுதான். அது போக்குவரத்து பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். நெரிசலை ஏற்படுத்தி விடுவதாக அமைந்து விடக் கூடாது. சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணா சாலையில் மேம்பாலங்கள் அமைவது குறித்து நிபுணர்களை கலந்து ஆலோசித்து அரசு முடிவு செய்வது நல்லது.


முரளி - ஷேர் ஆட்டோ டிரைவர்: நான் 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். அண்ணா சாலையில் அதுவும் பட்டுல்லாஸ் சாலை வரை நெரிசல் என்பதே இல்லை. நெரிசல் இல்லாத இடத்தில் பாலம் தேவையில்லாத ஒன்று. நெரிசல் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து பாலம் அமைக்கலாம். அண்ணா சாலையில் மேம்பாலங்கள் தேவையில்லை என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் அண்ணா சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்க ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் போக்குவரத்து பிரச்னை பெரிதாக வாய்ப்புள்ளது. எனவே, மேம்பாலங்கள் அமைக் கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இதற்கு பதிலாக வேறு இடங்களை தேர்வு செய்யலாம் என்றே மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படுமா என்பதே மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப் பாக உள்ளது.

0 comments: