ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைவிட 2.2 சதவீதம் அதிகரித்து, 85.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், மாணவர்கள் 81.9 சதவீதம் பேரும், மாணவியர் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருந்தாலும், முக்கியப் பாடமான கணிதத்தில் கடந்த ஆண்டைவிட 50 சதவீதத்திற்கும் குறைவாக, 'சென்டம்' சரிந்திருப்பது மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவர்கள் எழுதினர். இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 18 ஆயிரத்து 931 பேர்; மாணவியர் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 471 பேர். இதன் முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்களில் 85.2 சதவீத மாணவர்கள் (ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251பேர்) தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 83 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 2.2. சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.மாணவர்களில் 81.9 சதவீதம் பேரும், மாணவியரில் 88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களை விட இந்த ஆண்டும் மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 60 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 762 மாணவர்கள், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றனர். இது, இந்த ஆண்டு மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 747ஆக அதிகரித்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கணிதத் தேர்வு கடினமான முறையில் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதனால், எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் சரியலாம் என்றும், 'சென்டம்' வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.அவர்கள் கூறியதுபோலவே, முக்கிய பாடமான கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 4,060 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த ஆண்டு 1,762 பேர் மட்டுமே, 200க்கு 200 பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்திலும், 'சென்டம்' குறைந்துள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, இந்தப் பாடங்களின் மதிப்பெண்கள் முக்கியமாக இருக்கும் நிலையில், 'சென்டம்' கணிசமாக சரிந்திருப்பது, மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மாநில அளவிலான முதலிடம், வழக்கம்போல் இந்த ஆண்டும் தென் மாவட்டத்திற்கு சென்றது.கடந்த ஆண்டு தென்காசி அருகில் உள்ள இலஞ்சியைச் சேர்ந்த ரமேஷ், முதலிடம் பெற்றார். இந்த ஆண்டு, தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா பள்ளி மாணவர் பாண்டியன், 1,187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து ஒரு மாணவர் கூட, 'ஸ்டேட் ரேங்க்'கில் இடம்பெறவில்லை.
0 comments:
Post a Comment