மதுரை அரசு மருத்துவமனையில், நிதியுதவி பெற பச்சிளம் குழந்தை களுடன் பல மணி நேரம் பெண்கள் காத்து கிடப்பதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஜனனி சுரஷ்கா யோஜனா' திட்டத்தின்கீழ், இங்கு குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ், 12,000 ரூபாய் ஆண்டுவருமானம் உள்ள, நகரில் வசிப்போருக்கு 600 ரூபாயும், புறநகரில் வசிப்போருக்கு 700 ரூபாயும் வழங்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில் நிதி ஒதுக்கப்படாததால், 400 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் மதுரை இணைப்பில் மார்ச் 2ல் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து உடனுக்குடன் நிதி வழங்கப்படுகிறது. இப்
பணம் பெற, பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் பல மணி நேரம் டீன் அறை அருகே, 100ம் நம்பர் அறை முன், காலை முதல் மதியம் வரை காத்து கிடக்கின்றனர். இவ்வழியே பெரும்பாலான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு எளிதாக தொற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதுஎன்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
பெண்களிடம் கேட்டபோது, 'குழந்தையுடன் வந்தால்தான் பணம் தருகிறார்கள். குழந்தையுடன் வராவிட்டால், 'நீதான் பிள்ளையை பெற்றாயா என்பதற்கு என்ன ஆதாரம்' என்று கேட்கின்றனர். இதனால் வேறுவழியில்லாமல் குழந்தையுடன் வரவேண்டியுள்ளது' என்றனர். மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது : குழந்தையுடன் வரவேண்டிய அவசியமும் இல்லை. 'மாலை 3 மணிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அறிவிப்பு ஒட்டியிருந்தாலும், காலையிலேயே வந்து காத்து கிடக்கின்றனர். அவர் களை காக்க வைக்கக்கூடாது என்பதற்காக, ஒருமணி நேரத்திற்குள் பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறோம், என்றனர்.
0 comments:
Post a Comment