"டுவென்டி'-20 உலக கோப்பை தொடரின் "சூப்பர்-8' சுற்றை இந்திய அணி படுமோசமாக துவக்கியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்திய அணி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று "எப்' பிரிவில் நடந்த "சூப்பர்-8' போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
மீண்டும் காம்பிர்: இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. தினேஷ் கார்த்திக், பியுஸ் சாவ்லா, பிரவீண் குமாருக்கு பதிலாக முறையே காம்பிர், ரோகித் சர்மா, ஜாகிர் கான் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ரியான் ஹாரிஸ் நீக்கப்பட்டு, மிட்சல் ஜான்சன் வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, சற்று வித்தியாசமாக "பீல்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' வாட்சன்: ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், வார்னர் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் வாட்சன் திணற, ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. இதற்கு பின் விஸ்வரூபம் எடுத்த வாட்சன், இந்திய பவுலர்களை ஒருகை பார்த்தார். ஐ.பி.எல்., அனுபவம் கைகொடுக்க சிக்சர்களாக விளாசித் தள்ளினார். ரவிந்திர ஜடேஜா ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வார்னரும் வாணவேடிக்கை காட்டினார். ரவிந்திர ஜடேஜா சுழலில் இவரும் "ஹாட்ரிக்' சிக்சர்கள் அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் பறந்தது. யூசுப் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த வாட்சன், "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். அடுத்த பந்தில் இவர் 54 ரன்களுக்கு(1 பவுண்டரி, 6 சிக்சர்) போல்டானார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-வாட்சன் 104 ரன்கள் சேர்த்தனர்.
வார்னர் அசத்தல்: பின் யுவராஜ் வீசிய போட்டியின் 14வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த வார்னர் 72 ரன்களுக்கு(2 பவுண்டரி, 7 சிக்சர்) வெளியேறினார். யுவராஜ் சுழலில் ஹாடினும்(8) சிக்கினார். டேவிட் ஹசி 35 ரன்கள் எடுத்தார். இவரது சகோதரரான மைக்கேல் ஹசி(8) ஏமாற்ற, ரன் வேகம் குறைந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது.
நானஸ் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. மணிக்கு சராசரியாக 148 கி.மீ., பந்துவீசிய நானஸ் "டாப்-ஆர்டரை' அப்படியே சாய்த்தார். இவரது வேகத்தில் முரளி விஜய்(2), காம்பிர்(9), யுவராஜ்(1) நடையை கட்டினர். இதற்கு பின் வந்தவர்களும் ஏனோதானோ என ஆடினர். படுமட்டமாக பேட் செய்த இவர்கள், ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். டெய்ட் பந்தில் ரெய்னா(5) வீழ்ந்தார். ஸ்டீவன் ஸ்மித் சுழலில் கேப்டன் தோனி(2) அவுட்டானார். யூசுப் பதானும்(1) கைவிட்டார். பந்துவீச்சு, பீல்டிங்கில் சொதப்பிய ரவிந்திர ஜடேஜா(4) பரிதாபமாக ரன் அவுட்டானார். இவரை ஏன் தான் தேர்வு செய்தார்களோ?
ரோகித் ஆறுதல்: ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக போராடிய ரோகித் சர்மா, அரைசதம் கடந்து மானம் காத்தார். ஹர்பஜன் 13 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 17.4 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா 79 ரன்களுடன்(4 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை வார்னர் வென்றார்.
-----------------------------
ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன் (ப)யூசுப் பதான் 54(32)
வார்னர் (கே)தோனி (ப)யுவராஜ் 72(42)
டேவிட் ஹசி (கே)விஜய் (ப)நெஹ்ரா 35(22)
ஹாடின் (ஸ்டெம்)தோனி (ப)யுவராஜ் 8(7)
ஒயிட் -அவுட் இல்லை- 5(6)
மைக்கேல் ஹசி (ப)நெஹ்ரா 8(10)
ஸ்மித் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 1
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 184
விக்கெட் வீழ்ச்சி: 1-104(வாட்சன்), 2-142(வார்னர்), 3-166(ஹாடின்), 4-172(டேவிட் ஹசி), 5-183(மைக்கேல் ஹசி).
பந்துவீச்சு: ஹர்பஜன் 4-1-15-0, நெஹ்ரா 4-0-31-2, ஜடேஜா 2-0-38-0, ஜாகிர் 4-0-45-0, யூசுப் பதான் 4-0-35-1, யுவராஜ் 2-0-20-2.
இந்தியா
விஜய் (கே)ஒயிட் (ப)நானஸ் 2(7)
காம்பிர் (கே)மைக்கேல் ஹசி (ப)நானஸ் 9(10)
ரெய்னா (கே)கிளார்க் (ப)டெய்ட் 5(5)
ரோகித் -அவுட் இல்லை- 79(46)
யுவராஜ் (ப)நானஸ் 1(2)
தோனி (கே)டேவிட் ஹசி (ப)ஸ்மித் 2(8)
யூசுப் பதான் (கே)வார்னர் (ப)ஜான்சன் 1(5)
ஜடேஜா ரன்-அவுட்(டேவிட் ஹசி) 4(5)
ஹர்பஜன் (கே)டேவிட் ஹசி (ப)வாட்சன் 13(11)
ஜாகிர் (கே)கிளார்க் (ப)டெய்ட் 9(6)
நெஹ்ரா (ப)டெய்ட் 0(1)
உதிரிகள் 10
மொத்தம் (17.4 ஓவரில், ஆல்-அவுட்) 135
விக்கெட் வீழ்ச்சி: 1-10(விஜய்), 2-12(காம்பிர்), 3-17(ரெய்னா), 4-23(யுவராஜ்), 5-37(தோனி), 6-42(யூசுப் பதான்), 7-50(ஜடேஜா), 8-97(ஹர்பஜன்), 9-133(ஜாகிர்), 10-135(நெஹ்ரா).
பந்துவீச்சு: நானஸ் 4-0-25-3, டெய்ட் 3.4-0-21-3, வாட்சன் 3-0-31-1, ஜான்சன் 3-0-23-1, ஸ்மித் 4-0-34-1.
0 comments:
Post a Comment