இந்திய அணிக்கு மரண 'அடி'; ஹாட்ரிக் தோல்வியால் அவமானம்; உலக கோப்பை தொடரில் 'அவுட்'

Top world news stories and headlines detail 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது. மிக முக்கியமான 'சூப்பர்-8' போட்டியில், இலங்கையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது 'ஹாட்ரிக்' தோல்வியை சந்தித்து அவமானம் அடைந்துள்ளது. கடைசி பந்தில் கபுகேதிரா சிக்சர் அடிக்க, 'திரில்' வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.


மூன்றாவது 'டுவென்டி-20' உலககோப்பை வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதன் 'சூப்பர்-8' சுற்றின் 'எப்' பிரிவு போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை வென்றால் அரையிறுதிக்கு முன்னேறும். மாறாக, இந்திய அணி வெற்றி பெற்றால், 'ரன்ரேட்' அடிப்படையில் ஒருவேளை அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் மீண்டும் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, இம்முறை பேட்டிங் தேர்வு செய்து, சரியான முடிவு எடுத்தார்.


விஜய் நீக்கம்: இந்திய அணியில் முரளி விஜய், ஜாகிர் கான், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், பியுஸ் சாவ்லா மற்றும் அறிமுக வீரராக வினய் குமாரும் இடம் பெற்றனர். இலங்கை அணியின் மெண்டிஸ், சண்டிமால், வெலகேதராவுக்குப் பதில், பெரேரா, ஜெயசிங்கே, துஷாரா வாய்ப்பு பெற்றனர்.


கார்த்திக் ஏமாற்றம்: இந்திய அணிக்கு இம்முறை காம்பிருடன், தினேஷ் கார்த்திக் துவக்கம் கொடுத்தார். மாத்யூஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த கார்த்திக் (13) அதிக நேரம் நீடிக்கவில்லை.


காம்பிர் ஆறுதல்: பின் காம்பிருடன் ரெய்னா இணைந்தார். துஷராவின் ஓவரில் 3 பவுண்டரி உட்பட 17 ரன்கள் எடுத்து அதிரடியை துவக்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர் 41 ரன்களில், இத்தொடரில் நான்காவது முறையாக, 'ஷார்ட் பிட்ச்' பந்தில் சிக்கினார்.


ரெய்னா அரைசதம்: ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டாக ரன் சேர்க்க அணியின் ரன்வேகம், பெருமளவு குறைந்தது. ரந்திவ் பந்தில் சிக்சர் அடித்த ரெய்னா, இத்தொடரின் இரண்டாவது அரைசதத்தை எட்டினார். ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 63 ரன்கள் எடுத்த இவர் துஷாராவின் வேகத்தில் அவுட்டானார். யுவராஜ் (1) மீண்டும் ஏமாற்றினார்.


தோனி 23*, யூசுப் பதான் 13* ரன்கள் எடுத்து கைகொடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. மலிங்கா, துஷாரா தலா இரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.


ஜெயவர்தனா அதிர்ச்சி: எட்டிவிடும் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஜெயவர்தனா, ஜெயசூர்யா துவக்கம் கொடுத்தனர். நெஹ்ராவில் முதல் ஓவரில் பவுண்டரி அடித்த ஜெயவர்தனா (4), அவரிடமே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் வினய் குமார், ஜெயசூர்யாவை 'டக்' அவுட்டாக்கினார்.


தில்ஷன் அதிரடி: பின் தில்ஷனுடன் இணைந்த சங்ககரா நிதானமாக ஆடினார். மறுமுனையில் நெஹ்ரா, ஹர்பஜன் ஓவரில் தில்ஷன் தலா இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார். இருப்பினும் இவர் 33 ரன்களில் யூசுப் பதான் சுழலில் சிக்கினார்.


கைகொடுத்த சங்ககரா: அடுத்து வந்த மாத்யூஸ், சாவ்லாவின் ஓவரில் சிக்சர் அடித்து அசத்தினார். சங்ககரா தன் பங்கிற்கு யூசுப் பதான் ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். இவர் 46 ரன்களில் வினய் குமார் வேகத்தில் போல்டானார். பின் மாத்யூஸ் (), கபுகேதரா இணைந்து அணியின் வெற்றிக்கு போராடினர்.


'திரில்' ஓவர்: இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. நெஹ்ரா வீசிய முதல் பந்தை மாத்யூஸ் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த மூன்று பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் என்ற நிலையில் மாத்யூஸ் (46) ரன் அவுட்டானார். கடைசி பந்தில் 3 ரன் எடுக்க வேண்டிய நிலையில் கபுகேதரா, 'சூப்பர்' சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கபுகேதரா (37) அவுட்டாகாமல் இருந்தார்.


பேட்டிங் சொதப்பல்: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, பேட்டிங்கில் சொதப்பியது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 11 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. திடீரென தோனி, ரெய்னா மந்தமாக விளையாட, அடுத்த 9 ஓவரில் இந்திய அணி 67 ரன்கள் மட்டும் எடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணம்.


அரையிறுதியில் இலங்கை: இந்தியாவுடன், இலங்கை வெற்றி பெற்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேர ஆஸ்திரேலியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்படி இன்றைய போட்டியின் 2வது ஆட்த்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்கிய ‌வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சர்வான் 26 ரன்களும், சந்தர்பால் 24 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஹசி தலா 2விக்கெட்டு்‌களை வீழ்த்தினர்.


106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 16.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்து 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாடின் 42ரன் எடுத்தார். ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும் இந்த போட்டியின் மூலம் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த பிரிவில் மற்றொரு அணியான இலங்கை அணி, இந்தியாவுடன் பெற்ற வெற்றி மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.


சூப்பர்-8 ஆட்டம் இன்றுடன் முடிவடைந்தது. அடுத்த இனி நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டி மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதி போட்டி மே 14ம் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

0 comments: