விடா முயற்சியால் விவசாயி மகன் ஐ. ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு

Tamilnadu special news update

விருதுநகர் அருகே செவலூரை சேர்ந்த விவசாயி மகன் சங்கர்கணேஷ், விடா முயற்சியால் ஐ.ஆர்.எஸ்., ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். செவலூரை சேர்ந்த கருப்பையா. விவசாயியான இவரது மகன் சங்கர்கணேஷ். சிவில் சர்வீஸ் தேர்வில் 483வது 'ரேங்க்' பெற்று ஐ.ஆர். எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் கூறியதாவது: நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின் மதுரை தனியார் பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி முடித்து மதுரையில் உள்ள நிறுவனத்தில் சூப்பரவைசராக இரண்டு ஆண்டு பணியாற்றினேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தபாலில் மதுரை காமராஜ் பல்கலையில் பொருளாதாரம் பி.ஏ.,வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.


திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிபோது, நண்பர்களுடன் இணைந்து 'பிராசசிங் கன்சல்டன்சி' நிறுவனம் நடத்தினேன். சிவில் சர்வீஸ் தேர்வுக்காக சென்னையில் உள்ள 'ஆல் இந்தியா சிவில் சர்வீஸ்' பயிற்சி மையத்தில் நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஐந்து முறை தேர்வு எழுதினேன். மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வில் தோல்வியடைந்தேன். விடா முயற்சியால் தற்போது ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன். எனக்கு இது திருப்தியளிக்கவில்லை. தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., ஆவது தான் எனது லட்சியம். அப்போது தான் பொதுமக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது கிடைத்துள்ள பணியில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றி, எனது துறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, புதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளியில் படித்தாலும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியும். நமக்குள் உள்ள திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.


வெறும் படிப்பு மட்டுமே இருந்தால் போதாது. பத்திரிகைகள், மாத இதழ்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். உலக செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அனைவருடனும் திறந்த மனதுடன் பழக வேண்டும். இதுதான் எனது வெற்றிக்கு வழிகாட்டியாக அமைந்தன. எனது குடும்பத்தினர் பல வழிகளில் உதவிகள் செய்ததால் தான், என்னால் சாதிக்க முடிந்தது, என்றார்.

0 comments: