பேராவூரணியில் போலீசார் தாக்கியதாக கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு

பேராவூரணியில் வர்த்தகர்கள், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கண்டித்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.பேராவூரணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெஞ்சமின், ஏட்டுக்கள் பத்மநாதன், மாரிமுத்து ஆகிய மூவரும் கடந்த 10ம்தேதி இரவு 11 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு டீக்கடை வைத்திருந்த பிரபு என்பவரை தாக்கியதோடு, அவரது ஊழியர் ஷேக் என்பவரையும் கடுமையாக தாக்கி கடையிலுள்ள டியூப்லைட் மற்றும் கண்ணாடி ஜாடியை உடைத்தனராம்.இதேபோல மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் ஊழியர் சுப்பையன் என்பவரை தாக்கியதில் அவரது வலதுகை மணிக்கட்டு உடைந்தது. இச்சம்பவத்தின் போது போலீசார் மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இரவு 11 மணிக்குமேல் கடைகளை மூட வேண்டுமென்ற எந்தவித முன் அறிவிப்புமின்றி போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக கண்டித்து வர்த்தகர் கழக அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.சங்கத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அசோக்குமார், சங்க முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், லத்தீப், கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் கந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர்களை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. சங்க துணைத் தலைவர் தீபம் நல்லசாமி, பொருளாளர் அப்துல்லா, சுப்பிரமணியன், ராஜரத்தினம், தேவதாஸ் மற்றும் ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.இதுபற்றி அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., நாராயணசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுப்பையன், சேட்டு (எ) ஷேக் அலாவுதீன், பிரபு ஆகியோரை பார்வையிட்டார். பின்னர் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கூறியதன் பேரில் வர்த்தகர்கள் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

0 comments: