கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை

Tamilnadu special news update

சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது. இந்தியாவின் எரிசக்தித் தேவையை ஈடுகட்டும் வகையில், கல்பாக்கத்தில் 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈணுலை (பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு பாகமாக பொருத்தப்பட்டு வருகிறது. இந்த ஈணுலையின் வெப்பத் தணிப்பானாக சோடியம் பயன்படுத்தப்படுகிறது. மையத்தில் உள்ள மற்றும் முதன்மையான சோடியம் சர்க்கியூட் உட்பட, இந்த ஈணுலையின் மொத்த பாகங்களும் பிரதான கொள்கலன் (மெயின் வெஸ்சல்) எனப்படும் ஒரே கொள்கலனுக்குள் அடங்குகின்றன.


இந்த ஈணுலையில், வெப்பத் தணிப்பானை நிறுவும் மிக முக்கியமான பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது. பகல் 12.30 மணிக்குத் துவங்கிய இந்தப் பணி ஒரு மணி நேரம் நீடித்தது. தணிப்பான் நிறுவப்பட்டுவிட்டாலும், அவற்றை மற்ற பாகங்களோடு பொருத்தும் பணி முடிக்க 15 நாட்கள் தேவைப்படும்.
இந்த வெப்பத் தணிப்பான், இரண்டு பிரமாண்டமான இணை சிலிண்டர்களைக் கொண்டது. 'எஸ்எஸ் 316எல்என்' எனப்படும், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உலோகத்தினாலான இந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் ஐந்து மீட்டர் உயரம் கொண்டவை. உள்சிலிண்டர் 12.44 மீட்டர் விட்டமும், வெளிசிலிண்டர் 12.67 மீட்டர் விட்டமும் கொண்டது. சுற்றளவு 40 மீட்டர். இவற்றின் மொத்த எடை 70 டன்.


சிலிண்டர்களும், அவற்றுக்குள் இறங்கி பணிபுரிவதற்கான அமைப்புகளும், பிரேம்களும் சேர்த்து மொத்தமாக இந்த சிலிண்டர்களை பொருத்திய போது, அதன் எடை 170 டன்.


இதைப் பொருத்துவதற்காக, நாட்டிலேயே மிகப் பெரிய கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனின் அடிப்பகுதியில் இருந்தபடி, 170 டன் எடை கொண்ட வெப்பத் தணிப்பானை, தரையிலிருந்து 28 மீட்டர் உயரம் கொண்ட கட்டடத்துக்குள் இறக்கி, தரைக்குள் 30 மீட்டர் பள்ளம் கொண்ட ஈணுலைக்குள் பொருத்தப்பட்டது.


சிலிண்டர்களின் எந்தப் பக்கத்திலும் கொக்கிகளை பொருத்த முடியாது என்பதால், அதற்காகவே பிரத்தியேகமான பிரேம்கள் செய்யப்பட்டிருந்தன. மொத்தமாக 170 டன் எடை கொண்ட இந்த தணிப்பானை, கொள்கலனோடு பொருத்தியாக வேண்டும். ஒரு சிறு கீறல் விழுந்தாலும், மொத்தமும் பாழ் என்ற நிலையில், மிக மிகக் கவனமாக, திட்ட இயக்குனர் பிரபாத் குமாரின் நேரடி மேற்பார்வையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. எந்தக் கோளாறையும் சரி செய்ய முடியாது என்ற அபாயகரமான நிலையில், இந்தத் தணிப்பானை பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்தும், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டது.


இந்த வெப்பத் தணிப்பானின் முக்கிய செயல்பாடு, பிரதான கொள்கலனை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சோடியத்தை, வளையங்களாலான பாதை மூலம் அனுப்புவதே. குளிர்விக்கப்பட்ட சோடியம் மூலம், ஈணுலையில் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு, 450 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக்கப்படுகிறது. வெப்பத் தணிப்பான், அளவிலும் எடையிலும் மிகப் பிரமாண்டமானது என்பதால், ரயில் மூலமோ, தரை வழியாகவோ கொண்டு வருவது சாத்தியமில்லாதது. இதனால், இந்தத் தணிப்பானை, 'பெல்' நிறுவனம், கல்பாக்கத்தில் வைத்தே பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுத்தது. இந்த மொத்தத் திட்டமும் தேசத்தின் பெருமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 comments: