மைக்கேல் ஹசி அதிரடி: பைனலில் ஆஸி., *கடைசி ஓவரில் கோட்டைவிட்டது பாக்.,


"டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் கடைசி ஓவரில் மைக்கேல் ஹசி "சிக்சர் மழை பொழிய, ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி வாய்ப்பை வீணாக பறிகொடுத்த "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.
வெஸ்ட் இண்டீசில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று செயின்ட்லூசியாவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் "நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
துவக்கம் தாமதம்:
மழை காரணமாக மைதானத்தின் பெரும்பாலான பகுதி ஈரமாக இருந்ததால், போட்டி துவங்குவதில் அரைமணி நேரம் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சூப்பர் ஜோடி:
முதல் ஓவரை நானஸ் "மெய்டனாக வீசினார். இதற்கு பின் கம்ரான் அக்மல், சல்மான் பட் இணைந்து பாகிஸ்தானுக்கு அசத்தல் துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி மழை பொழிய, ஆஸ்திரேலிய பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. டெய்ட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஸ்மித் சுழலில் கம்ரான் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். வாட்சன் வீசிய 9வது ஓவரில் சிக்சர் மற்றும் 2 பவுண்டரி அடித்த கம்ரான், 32 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 5வது அரைசதம். பின் ஜான்சன் பந்தை விரட்டிய கம்ரான்(50), வார்னரின் சூப்பர் "கேட்ச்சில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு கம்ரான்-சல்மான் 82 ரன்கள் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஸ்மித் சுழலில் சல்மான்(32) சிக்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி(8) ஏமாற்றினார்.
உமர் அரைசதம்:
பின் அண்ணன் கம்ரான் வழியில், அவரது தம்பி உமர் அக்மல் கடைசி கட்டத்தில் கலக்கினார். ஜான்சன் வீசிய 18வது ஓவரில் 3 சிக்சர்கள் விளாசிய இவர், அரைசதம் அடித்தார். லத்திப் 13, ரசாக் 12 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. <உமர்(56) அவுட்டாகாமல் இருந்தார். ஆமர் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. முகமது ஆமர் வேகத்தில் வார்னர் "டக் அவுட்டானார். சிறிது நேரம் அதிரடி காட்டிய வாட்சனும்(16), ஆமர் பந்தில் வீழ்ந்தார். இரண்டு ஐ.பி.எல்., நட்சத்திரங்களும் விரைவில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. ஹாடின்(25) அதிக நேரம் நீடிக்கவில்லை. அப்ரிதி வலையில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(17) வெளியேற, 4 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். ஹபீஸ் ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். தொடர்ந்து சுழலில் மிரட்டிய அப்துர் ரஹ்மான், டேவிட் ஹசியை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
"திரில் வெற்றி:
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. படுமோசமாக பந்துவீசிய சயீத் அஜ்மல், பாகிஸ்தானின் வில்லனாக மாறினார். முதல் பந்தில் ஜான்சன் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் மைக்கேல் ஹசி "சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் "சிக்சருக்கு பறக்க "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் "பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் இன்னொரு இமாலய சிக்சர் அடித்த மைக்கேல் ஹசி அணிக்கு "திரில் வெற்றி தேடி தந்தார். ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து, "திரில் வெற்றி பெற்றது.
முதல் முறை:
இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது. 24 பந்துகளில் 60 ரன்கள்(3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசிய மைக்கேல் ஹசி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நாளை நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
கம்ரான்(கே)வார்னர்(ப)ஜான்சன் 50(34)
சல்மான்(கே)வார்னர்(ப)ஸ்மித் 32(30)
உமர் அக்மல்-அவுட் இல்லை- 56(35)
அப்ரிதி(கே)ஹாடின்(ப)டேவிட் ஹசி 8(9)
லத்திப்(கே)வார்னர்(ப)நானஸ் 13(6)
ரசாக்-ரன் அவுட்-(ஹாடின்/டெய்ட்) 12(7)
மிஸ்பா-ரன் அவுட்-(டெய்ட்) 0(0)
உதிரிகள் 20
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-82(கம்ரான்), 2-89(சல்மான்), 3-114(அப்ரிதி), 4-145(லத்திப்), 5-189(ரசாக்), 6-191(மிஸ்பா).
பந்துவீச்சு: நானஸ் 4-1-32-1, டெய்ட் 4-0-25-0, ஜான்சன் 4-0-37-1, வாட்சன் 2-0-26-0, ஸ்மித் 2-0-23-1, டேவிட் ஹசி 3-0-24-1, மைக்கேல் கிளார்க் 1-0-13-0.
ஆஸ்திரேலியா
வார்னர்(கே)உமர்(ப) ஆமர் 0(2)
வாட்சன்(கே)ரஹ்மான்(ப)ஆமர் 16(9)
ஹாடின்(ஸ்டம்)கம்ரான்(ப)ரஹ்மான் 25(20)
கிளார்க்(ஸ்டம்)கம்ரான்(ப)அப்ரிதி 17(19)
டேவிட் ஹசி(கே)+(ப)ரஹ்மான் 13(9)
ஒயிட்(கே)ஹபீஸ்(ப)ஆமெர் 43(31)
மைக்கேல் ஹசி-அவுட் இல்லை- 60(24)
ஸ்மித்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல் 5(4)
ஜான்சன்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 13
மொத்தம் (19.5 ஓவரில் 7 விக்.,) 197
விக்கெட் வீழ்ச்சி: 1-1(வார்னர்), 2-26(வாட்சன்), 3-58(ஹாடின்), 4-62(கிளார்க்), 5-105(டேவிட் ஹசி), 6-139(ஒயிட்), 7-144(ஸ்மித்).
பந்துவீச்சு: ஆமர் 4-0-35-3, ரசாக் 2-0-22-0, ரஹ்மான் 4-0-33-2, அஜ்மல் 3.5-0-46-1, அப்ரிதி 4-0-34-1, ஹபீஸ் 2-0-20-0.

0 comments: