திருவாரூரில் 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவு வழங்கப்பட்டது.
நர்சரி முதல் பிளஸ் 2 வரையில் சுயநிதி அடிப்படையில் இயங்கும் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு பரிந்துரையின் படி கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நர்சரி, மெட்ரிக் மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளிகள் என 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்ட உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி பள்ளிகளுக்கு வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: விண்ணப்பித்த 99 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணத்தை வசூலிக்கவேண்டும். இதை பள்ளிகளில் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓரிரு நாளில் இணையதளத்திலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கான கட்டண விபரம் வெளியிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண நிர்ணயித்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாக கருதினால் 15 நாட்களுக்குள் கட்டண குழுவிடம் முறையீடு செய்து கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் மீதமுள்ள பள்ளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அருள்மணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சாரதா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பஞ்சநாதன், ராஜமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: