அரியலூரில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

அரியலூரில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காலாவதியான உணவு பொருட்கள் பற்றிய சோதனை நடத்தும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அரியலூர் நகரில் உள்ள ஏழுமலை பட்டாணி கடை, மாரியம்மன் ஸ்டோர், ஜெயவிலாஸ், அமுத விலாஸ் எண்ணை கடை, ராஜலெக்ஷ்மி மளிகை கடை, வைக்கம் ஸ்டோர், பிஸ்மி ஸ்டோர் உள்பட 13 கடைகளில், அரியலூர் ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரகமத்துல்லா கான், தாசில்தார் எட்டியப்பன், ஆர்.ஐ., கோவிந்தராஜ், நகராட்சி நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன், தலைமை எழுத்தர் குமரன், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, விற்பனை தேதி காலாவதியான பிஸ்கட், குளிர்பானம், மிட்டாய், எண்ணை வகைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


அரியலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம் தலைமையிலான அதிகாரிகள், செல்வராஜ் என்பவரது கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். ''பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள் அனைத்தும் கொட்டி அழிக்கப்படும்,'' என ஆர்.டி.ஓ., ஜீவரத்தினம் கூறினார்.

0 comments: