புதிய பாஸ்போர்ட் அலுவலகம் திருநெல்வேலியில் அமைகிறது

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்போர் காத்திருப்பதைத் தவிர்க்க, திருநெல்வேலியில் புதிய அலுவலகத்தை திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு ஒரே பாஸ்போர்ட் அலுவலகம், மதுரையில் செயல்படுகிறது. ஒன்பது மாவட்ட மக்களை கவனிக்க வேண்டி இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்ப சேகரிப்பு மையங்கள் செயல்பட்ட பிறகும் இந்நிலை நீடிக்கிறது.

இதற்கிடையில், மதுரை அலுவலகத்தின் வேலை பளுவை குறைக்கும் பொருட்டும், நீண்ட நேரம் விண்ணப்பதாரர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இதன்படி, மதுரையில் மற்றொரு அலுவலகத்தையும், திருநெல்வேலியில் ஒரு பாஸ்போர்ட் அலுவலகத்தையும் டி.சி.எஸ்., நிறுவனம் நடத்தும். புதிய விண்ணப்பங்களை பெறுவது, சரி பார்ப்பது ஆகிய பணிகளை இந்த அலுவலகம் செய்யும். அதன் பிறகு விண்ணப்பங்கள், மதுரை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கு பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


மதுரை பாஸ்போர்ட் அலுவலர் ஜோஸ் கே.மாத்யூ கூறும்போது, ''விண்ணப்பதாரர்கள், நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும், இங்கு வந்து வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது'' என்றார். அடுத்த ஆண்டு முதல் புதிய அலுவலகங்கள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: