'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான, 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சோபிக்கத்தவறிய இலங்கை அணி, பரிதாபமாக தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீசில், மூன்றாவது 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. இதன் முதல் லீக் போட்டி, கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 'பி' பிரிவில் உள்ள சங்ககரா தலைமையிலான இலங்கை அணி, வெட்டோரியின் நியூசிலாந்து அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.


ஜெயவர்தனா அபாரம்: முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு, தில்ஷன் (3) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா (4) ஏமாற்றினார். பின்னர் இணைந்த மகிலா ஜெயவர்தனா, தினேஷ் சண்டிமால் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய ஜெயவர்தனா, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் தனது 3வது அரைசதமடித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த போது, சண்டிமால் (29) அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜெயவர்தனா, 51 பந்தில் 81 ரன்கள் (2 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கபுகேதிரா (11), மாத்யூஸ் (3) சோபிக்கவில்லை. இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஷேன் பாண்டு 2, நாதன் மெக்கலம், டிம் சவுத்தி, ஜேக்கப் ஓரம், ஸ்டைரிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


ரைடர் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு, பிரண்டன் மெக்கலம் 'டக்-அவுட்டாகி' சொதப்பினார். பின்னர் இணைந்த ஜெசி ரைடர், மார்டின் கப்டில் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த போது ரைடர் (42), முரளிதரன் சுழலில் சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கப்டில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் (9), ஸ்டைரிஸ் (17), ஜேக்கப் ஓரம் (15), ஹோப்கின்ஸ் (1) நீண்டநேரம் நிலைக்கவில்லை.


திரில் வெற்றி: கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதலிரண்டு பந்தில் நாதன் மெக்கலம், வெட்டோரி தலா ஒரு ரன் எடுத்தனர். மூன்றாவது பந்தில் நாதன் மெக்கலம் ஒரு பவுண்டரி அடிக்க, கடைசி மூன்று பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில், இரண்டு ரன்களுக்கு ஆசைப்பட்ட வெட்டோரி (17), ரன்-அவுட்டானார். கடைசி இரண்டு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நாதன் மெக்கலம் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாதன் மெக்கலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து போட்டி


கயானா : உலககோப்பை டுவென்டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் துவங்கியுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி, அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷம்மி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

0 comments: