பொது இடங்களில் முழுமையாக முகத்தை துணியால் மறைக்கும் வண்ணம் ஆடை அணிவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று பெல்ஜிய பாராளுமன்ற கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலமானது பூங்காக்கள், வீதிகள் போன்ற இடங்களில் ஆடை அணிந்திருப்பவரின் முகத்தை அடையாளங் காணத் தடையாக அமைந்த எந்தவொரு ஆடையை அணியவும் தடை விதிப்பதை நோக்காகக் கொண்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிராக பெல்ஜிய பாராளுமன்ற கீழ்சபையில் எவரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டமூலம் தற்போது செனட் சபையின் வாக்கெடுப்புக்குச் செல்லவுள்ளது.
இந்நிலையில் மேற்படி சட்டமூலம் தொடர்பில் செனட் சபையில் நீண்ட விவாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டமூலத்திற்கு ஆஜராகியிருந்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் போது ஆஜராகியிருக்கவில்லை.
செனட் சபையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் லிபரல்களும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக கேள்வி தொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.
கடந்த வாரம் பெல்ஜிய அரசாங்கம் பிளவடைந்த நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் மேற்படி சட்டமூலத்தை செனட் சபையில் நிறைவேற்ற மேலும் அதிக காலம் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும், மேற்படி சட்டமூலத்தை ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் சட்டமாக மாறினால் அதனை மீறுபவர்கள் 15 யூரோவிலிருந்து 25 யூரோ வரையான தண்டப் பணத்தையோ அன்றி 7 மாத சிறைத்தண்டனையையோ எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment