குணங்குடி ஹனீபா அவர்களின் மூத்த மகன் முகைதீன் துபையில் பணி புரிகிறார். தந்தை சிறையில் இருக்கும் போது குடும்பத்தை சிரமங்களிலிருந்து ஓரளவாவது மீட்டு வழி நடத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. அவரிடம் மக்கள் உரிமைக்காக மின்அஞ்சலில் கேள்விகளை அனுப்பி இருந்தோம். அவரது பதிலை சமுதாயத்தின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறோம்.
கேள்வி : தீர்ப்பு தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஏப்ரல் 23 அன்று தீர்ப்பு தள்ளிப்போயிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : எங்களது குடும்பத் தார்களும், சமுதாய மக்களும் எனது தந்தையின் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் என்று எதிர்பபார்க்கப்பட்ட ஏப்ரல் 23 மீண்டும் தள்ளிப்போயிருப்பது என்பது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் நிச்சயமாக கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையில் செயல்படும் திமுக அரசின் சதி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
கடந்த பல மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பிணை தாக்கல் (ஜாமினில் விடுதலை செய்ய) செய்த போது, தமிழக அரசு பிணை கொடுக்க மறுத்து, இரண்டு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என்றார்கள். ஆக வழக்கு முழுவதுமாக நடத்தப்பட்டு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தருவாயில்தான் தீர்ப்பை இழுத்தடித்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் எனது தந்தைக்கு எதிராக இந்த வழக்கிலிருந்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறி உள்ளார்கள். எனவே விடுதலை நிச்சயம், நியாயமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தான் தீர்ப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி அவர்கள் யாரையோ திருப்திபடுத்துவதற்காக வழக்கை இழுத்தடிக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. இந்தியாவை அச்சுறுத்தும் சங்பரிவார கூட்டத்தாருடன் மீண்டும் கைகோர்க்க கிளம்பி விட்டார் என்று கருதத்தோன்றுகிறது. மதுரை லீலாவதி வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றிருந்த தனது கட்சிக்காரர்களை விடுதலை செய்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 1400 கைதிகளை விடுதலை செய்தார் ஆனால் கடந்த ஆண்டு முஸ்லிம் இயக்கங்களின் சார்பாக கடுமையாக வலியுறுத்தியதின் காரணமாக கோவை வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை அடைய இருந்த பத்து முஸ்லிம்களை மட்டுமே விடுதலை செய்து ஏமாற்றம் அளித்தார் கருணாநிதி. ஆக மனுநீதிச் சோழன் என்றும், முஸ்லிம்களின் நண்பன் என்றும் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் பரிபாலனத்தை எப்படியும் பயன்படுத்துவார் கருணாநிதி என்பது விளங்குகிறது.
கேள்வி : தங்களின் தந்தையின் கைதிற்கு பிறகு உங்கள் குடும்பத்தின் நிலை என்ன?
பதில் : 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 15&ஆம் நாள் எனது சகோதரியின் திருமணத்தின் போது எனது தந்தை கைது செய்யப்பட்டார் என்பது அனை வரும் அறிந்ததே. அதன்பிறகு ஒரு சில வாரங்களில் நானும் எனது சகோதரரும் விசாரணை கைதியாக போலிசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக் கொண்டு ஒருசில மாதங்களில் விடுதலை செய்யப் பட்டோம்.
இந்த காலகட்டங்களில் எனது தாயார் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். உழைத்து சம்பாதித்து ஊதியத் தை ஈட்டித்தர வேண்டிய பிள்ளைகளும் தனது கணவரும் கைது செய்யப்பட்டால் ஒரு குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிகழும் என்பதை ஒவ்வொருவரும் சற்று நினைத்துப்பார்த்தாலே எளிதில் விளங்கிக்கொள்ளலாம். ஆக வறுமையில் இருந்த எங்களின் குடும்பத்திற்காக வறுமையை போக்க விடுதலை அடைந்த நானும் எனது சகோதரரும் சென்னை மணலியில் உள்ள சிறிலி (விஸிலி) தொழிற்சாலையில் பல வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக கூலி வேலை செய்கின்ற தருவாயில், அல்லாஹ்வின் மாபெரும் உதவியைக்கொண்டு வளைகுடா த.மு.மு.க&வின் முன்னாள் அமைப்பாளராக இருந்த சகோதரர் மேலப்பாளையம் ஃபழ்லுல் இலாஹி அவர்களின் மூலமாக வளைகுடாச் சென்று பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கூட இன்னும் நாங்களும் எனது தாயாரும் எனது தந்தையுடைய பெற்றோர்களும் மனவேதனை யோடுதான் எனது தந்தையின் விடுதலையை எதிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் எங்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி : சமுதாய மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?
பதில் : நீதி சாரியான தருவாயில் கூறாமல் எனது தந்தையின் வழக்கில் சதிச் செயலின் மூலமாக தாமதப்படுத்தி, நீதிபதிகளையும்கூட தமிழக அரசு மாற்றி வருகிறது. எனவே தமிழக அரசு தற்போது எந்த சிந்தனையில் உள்ளது என்பதை தமிழக முஸ்லிம்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். பா.ம.க முதல் பொருளாளர், த.மு.மு.க நிறுவனத் தலைவர், ஜிஹாத் கமிட்டியின் தலைவர், எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்ற அரசியல்கட்சி தலைவர்களோடு பல கூட்டங்களில் பேசியவர் போன்ற நிகழ்வுகளை பெற்றிருக்கின்ற எனது தந்தைக்கே நீதி மறுக்கப்படுகிறதென்றால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு எந்த அளவு நீதி மறுக்கப்பட்டு மோசடி நடந்து வருகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே நமது சமுதாய மக்கள் முழுமையான விழிப்புணர்வு பெற வேண்டும்.
சமுதாய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவை புகட்டுவதோடு மட்டுமல்லாமல் மார்க்க அறிவையும் சேர்த்து கற்றுத் தர வேண்டும். சமுதாயத்தின் அக்கரையுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். எங்களைப் போன்று சமுதாயத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக் காக வாதாடுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வழக்கறிஞரை தன்னார்வு உணர்வுடன் செயல்படும் வண்ணம் உருவாக்கப்பட வேண்டும்.
எனது தந்தையின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் த.மு.மு.க&வின் பணிகளுக்காக சமுதாய மக்களும், ஜமாத்தார்களும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். சமுதாய இயக்கங்கள் இது போன்ற பொதுப் பிரச்சினைக்களுக்காக ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பதுதான் சமுதாய மக்களுக்கும், சமுதாய இயக்கங்களுக்கும் நாங்கள் அன்போடு விடுக்கும் கோரிக்கையாகும்!.
நன்றி : த.மு.மு.க
0 comments:
Post a Comment