சென்னையில் இந்திய அணி தேர்வு

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு, வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது.


இந்திய அணி கடைசியாக, கடந்த 2005-2006ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது. அதன்பின் ஜிம்பாப்வே அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனிடையே உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, முத்தரப்பு தொடரில் பங்கேற்க, ஜிம்பாப்வே செல்கிறது.


மே 28 முதல் ஜூன் 9 வரை நடக்கும் இதில், மூன்றாவது அணியாக இலங்கை அணி கலந்து கொள்கிறது. லீக் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும். போட்டிகள் புலவாயோ மற்றும் ஹராரேயில் நடக்கும்.


அடுத்து ஜூன் 12, 13ம் தேதிகளில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் இரண்டு "டுவென்டி-20' போட்டி நடக்கிறது. இந்த இரு தொடர்களில் பங்கேற்கவுள்ள, இந்திய வீரர்கள் தேர்வு வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கைவிடப்பட்டது:


இதனிடையே உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்வையிட, தேர்வுக்குழு உறுப்பினர்கள் சுரேந்திரா பாவ், ராஜா வெங்கட் இருவரையும் வெஸ்ட் இண்டீஸ் அனுப்பும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கைவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில்,"" இங்கிலாந்தில் இருந்து செல்வதற்கு சுரேந்திராவுக்கு விசா இல்லை. இதனால் தான் இவர்கள் வெஸ்ட் இண்டீஸ் செல்லவில்லை,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: