மின் தட்டுப்பாடால் அழுகி துர்நாற்றம் வீசும் பிணங்கள்

சென்னை அரசு பொது மருத்துவமனையின் பிணவறையில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு காரணமாக 'ஏசி' மிஷின்கள் இயக்கம் அடிக்கடி நின்று விடுவதால் பிணங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக நோயாளிகள், பார்வையாளர்கள், சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


ஆசியாவிலேயே பிரமாண்டமான அரசு பொது மருத்துவமனை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது. பல நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டடத்தில் இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆந் திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்தளவிற்கு சென்னை அரசு பொது மருத்துவமனை பிரசித்தி பெற்றதாகும்


இந்த மருத்துவமனையின் பல்வேறு பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிணவறை மற்றும் பிண பரிசோதனை அறை மட்டும் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமல் இருந்து வருகிறது. பழமைவாய்ந்த சென்னை மருத்துவக்கல்லூரி கட்டடத்தின் ஒரு பகுதியில் பல ஆண்டாக பிணவறை இயங்கி வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 120 பிணங்களை குளிர்சாதன வசதியுடன் பதப் படுத்தி வைப்பதற்கான இடவசதி உள்ளது. மேலும், பிணவறையின் கதவுகளை திறந்து மூடும் நேரங்களில் கடும் துர்நாற்றம் வீசுவது தொடர்கதையாக உள்ளது.


தற்போது இந்த பிணவறையில் ரயில் விபத்து உள்ளிட்டவைகளில் சிக்கி உயிரிழந்த, அடையாளம் தெரியாத 60 நபர்களின் சடலங்கள் வைக்கப் பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மின்தட்டுப் பாடு காரணமாக, பிணவறையில் உள்ள குளிர்சாதன இயந்திரங்கள் அடிக்கடி இயங்காமல் நின்று விடுகின்றன. பராமரிப்பும் சீராக இல்லை, இங்கு பிணங்கள் அழுகி தற்போது கடும் துர்நாற்றம் வீசத்துவங்கியுள்ளது. இந்த துர்நாற்றம் பிணவறை அருகே மட்டுமின்றி காற்றில் கலந்து அதன் அருகில் உள்ள மருத்துவமனை முதல் கோபுர வளாகத்தையும் சூழ்ந்துள்ளது.


காலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும் புறநோயாளிகள், பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மருத்துவமனை ஊழியர்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காற்றில் கலந்துள்ள துர்நாற்றம் ஆடைகளிலும் பட்டு சில நிமிடங்கள் வரை நீடிக் கிறது. தனிநபர் சுகாதாரத் திற்கும் இது அபாயமானது.


இது குறித்து பிணவறை ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது,' இங்கு ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் பிணங்கள்தான் அதிகளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல்கள் பல மணிநேரம் கழித்துதான் மீட்கப்படுகின்றன. அதனால், அந்த உடல்கள் அழுகிய நிலையில் தான் பிணவறைக்கு கொண்டு வரப்படுகின்றன. அடையாளம் தெரியாத பிணங்களை அடக்கம் செய்யும் பணியில் சமூக சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால், இந்த துர்நாற்ற பிரச்னைக்கு அடுத்த சில நாட்களில் முடிவு கிடைத்துவிடும்' என்றனர்.

0 comments: