இந்திய அணி திணறல் வெற்றி! * ஆப்கன் துணிச்சல் ஆட்டம்

"டுவென்டி-20' உலககோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில், அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் துணிச்சலாக போராடினர். சுலப வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தடுமாறியது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.


வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில், குரூப் "சி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.


நெஹ்ரா அசத்தல்: முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, நூர் அலி, கரீம் சாதிக் துவக்கம் தந்தனர். நெஹ்ரா வேகத்தில் மிரட்டினார். இவரது துல்லியமான பந்து வீச்சில் கரீம், டக்-அவுட்டானார். தொடர்ந்து மிரட்டியா நெஹ்ரா, முகமது ஷாஜத்தையும் (6) வெளியேற்றி நம்பிக்கை அளித்தார். அடுத்து வந்த ஆப்கானிஸ்தான் கேப்டன் மங்கல் (5) ஏமாற்றினார்.


நூர் அலி அசத்தல்: பின்னர் களமிறங்கிய அஸ்கர், நூர் அலியுடன் இணைந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை சுலபமாக சமாளித்தது. பொறுப்புடன் ஆடிய நூர் அலி, "டுவென்டி-20' அரங்கில் முதல் அரை சதம் பதிவு செய்தார். இவர் 50 ரன்களுக்கு (4 பவுண்டரி) அவுட்டானார்.


பறிபோன "ஹாட்ரிக்': மூன்று சிக்சருடன் அதிரடி காட்டிய அஸ்கர் (30), பிரவீணிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த பந்திலேயே முகமது நபியை (0) அவுட்டாக்க, பிரவீண் குமாருக்கு "ஹாட்ரிக்' விக்கெட் வாய்ப்பு காத்திருந்தது. ஆனால் அடுத்து வந்த ஹமீத் ஹசன் கவனமாக ஆட, வாய்ப்பு பறிபோனது. பின்வரிசையில் சமியுல்லா (7), ஹமித் ஹசன் (6) சொற்ப ரன்களுக்கு வெளியேற, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, 115 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் நெஹ்ரா 3, பிரவீண் 2 விக்கெட் வீழ்த்தினர்.


காம்பிர் ஏமாற்றம்: எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, காம்பிர் ஏமாற்றம் அளித்தார். இவர் வெறும் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரெய்னா நீண்ட நேரம் நிலைக்க வில்லை. இவர் 18 ரன்களுக்கு (1 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார்.


விஜய் அசத்தல்: பின்னர் விஜய்-யுவராஜ் இணைந்து நிதானமாக ஆடினர். 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்த விஜய், அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.


தோனி அதிரடி: பின்னர் களமிறங்கிய இந்திய கேப்டன் தோனி, மங்கல் வீசிய ஆட்டத்தின் 15 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார். 14. 5 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தோனி (15), யுவராஜ் (23) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை நெஹ்ரா கைப்பற்றினார். இவ்வெற்றியின் மூலம் இந்தியா 2 புள்ளிகள் பெற்றது.
--------


சாதனை சமன்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் தோனி, 4 "கேட்ச்' பிடித்து அசத்தினார். இதன் மூலம் "டுவென்டி-20' உலககோப்பை அரங்கில், அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (எதிர்-ஜிம்ப்பாப்வே), இங்கிலாந்தின் பிரயர் (எதிர்-தென் ஆப்ரிக்கா), பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் (எதிர்-நெதர்லாந்து), அயர்லாந்தின் நெயில் ஓ பிரைன் (எதிர்-இலங்கை) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.


--------


ஸ்கோர் போர்டு


ஆப்கானிஸ்தான்


நூர் அலி (கே) தோனி (ப) நெஹ்ரா 50 (48)
கரீம் சாதிக் (கே) தோனி (ப) நெஹ்ரா 0 (4)
ஷாஜத் (கே) தோனி (ப) நெஹ்ரா 6 (5)
மங்கல் (கே) காம்பிர் (ப) ஜடேஜா 5 (11)
அஸ்கர் (கே) ஜாகிர் (ப) பிரவீண் 30 (33)
நபி (கே) தோனி (ப) பிரவீண் 0 (3)
அமட்சாய் -அவுட் இல்லை- 5 (5)
சமியுல்லா -ரன் அவுட்(ஜடேஜா) 7 (6)
ஹமித் (கே) நெஹ்ரா (ப) ஜாகிர் 6 (5)
ஷபூர் -அவுட் இல்லை- 0 (0)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில் 8 விக்., இழப்பு) 115
விக்கெட் வீழ்ச்சி: 1-6 (கரீம் சாதிக்), 2-22 (ஷாஜத்), 3-29 (மங்கல்), 4-97 (நூர் அலி), 5-97 (அஸ்கர்), 6-97 (முகமது நபி), 7-107 (சமியுல்லா), 8-114 (ஹமித்).
பந்து வீச்சு: பிரவீண் 3-0-14-2, நெஹ்ரா 4-0-19-3, ஜாகிர் 3-0-24-1, ஜடேஜா 4-1-15-1. யுவராஜ் 1-0-4-0, ஹர்பஜன் 4-0-24-0, யூசுப் பதான் 1-0-12-0.


இந்தியா


காம்பிர் (கே) நபி (ப) அமட்சாய் 4 (6)
முரளி விஜய் (கே) ஜட்ரான் (ப) ஹமித் 48 (46)
ரெய்னா எல்.பி.டபிள்யு., (ப) சமியுல்லா 18 (13)
யுவராஜ் -அவுட் இல்லை- 23 (22)
தோனி -அவுட் இல்லை- 15 (6)
உதிரிகள் 8
மொத்தம் (14. 5 ஓவரில் 3 விக்., இழப்பு) 116
விக்கெட் வீழ்ச்சி: 1-19 (காம்பிர்), 2-46 (ரெய்னா), 3-101 (விஜய்).
பந்து வீச்சு: அமட்சாய் 2-0-21-1, ஜட்ரான் 2-0-6-0, நபி 3-0-33-0, சமியுல்லா 2-0-11-1, கரீம் 2-0-22-0, ஹமித் 3-0-8-1, மங்கல் 0.5-0-14-0.

0 comments: